Friday, March 21, 2014

நமோ ஆட்சி, தமிழகத்தில்


ஆண்டவன் புண்ணியத்திலே, எல்லாம் நல்லபடியாக நடந்தேறினால், நமோ நரேந்திர மோடி இந்திய தேசத்தின் பிரதம மந்திரியாக பதவி ஏற்பார்.

வை.கோபால்சாமி, இந்திய தேசத்தின் வெளிநாட்டு மந்திரியாக பொறுப்பேற்று, ஐக்கிய நாட்டு சபைக்குச் சென்று, தனி ஈழம் பெற்றுத் தந்திடுவார்.

அன்புமணி, இந்திய தேசத்தின் ஆரோக்கியதுறைக்கு மந்திரியாக பொறுப்பேற்று, நாட்டு மக்களின் பிணியினைப் போக்கி, சகல செளபாக்கியங்களையும் பெற்று வாழ நல்வழி வகுத்து, திட்டங்களை நிறைவேற்றுவார்.

விஜய்காந்த் கட்சி ஆளுக்கு, இரயில்வே துறை மந்திரி.

பிறகு என்ன, 2016ஆம் ஆண்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து, விஜய்காந்தை தமிழகத்தின் முதலைச்சராக்கி விடுவார்கள். விஜய்காந்தின் பதவி ஏற்பு விழாவுக்கு, பிரதம மந்திரி நமோ நரேந்திர மோடி, நேரில் வந்து இருந்து வாழ்த்து தெரிவிப்பார்.

இந்தமாதிரி திரைக்கதை எழுதினாலே, யாரும் ஏத்துக்க மாட்டாங்க. நிஜத்திலே எப்படி நிறைவேறும்.

ஒண்ணும் பண்ணாமல், சும்மா இருந்திருந்தாலே, 2016இல், விஜய்காந்த், வை.கோபால்சாமி, இராமதாஸ்; இவுங்க மூன்று பேருக்குள் கடும்போட்டி என்ற நிலை இருந்திருக்கும்.

இப்ப, வலிமையான நான்காவது கட்சியை, தமிழகத்தில் உருவாக்க வழிவகுத்துக் கொடுத்து விட்டார்கள்.

நமோ நரேந்திர மோடி, வாஜ்பாய்யும் இல்லை; அத்வானியும் இல்லை.

நமோ நரேந்திர மோடி, சோனியா காந்தியும் இல்லை; இராகுல் காந்தியும் இல்லை.

நமோ நரேந்திர மோடியின் திட்டங்கள் அமல்படுத்த வேண்டும் என்றால், இந்தியா, மாசேதுங்வின் சீனாவாக வேண்டும்.

நமோ நரேந்திர மோடியின் செயல்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட வேண்டுமானால், இந்தியா ஸ்டாலின் ரஷ்யாவாக வேண்டும்.

சிங்கப்பூரின் தந்தை, ஜனநாயகத்தை நிலை நிறுத்தவில்லை. சிங்கப்பூர், சின்ன நாடு. ஆதலால், அந்த தேசத்தின் தந்தை, சர்வாதிகாரியாக வேண்டிய அவசியம் இல்லை.

ஜெர்மனி. நாசி. ஹிட்லர்.

ஜெர்மனி, ஹிட்லரின் காலத்தில் வெகுவிரைவாக முன்னேறியது. ஜெர்மனி மக்கள், ஹிட்லரின் வார்த்தை, செயல் அனைத்துமீதும், முழு நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். மக்களின் கண்களுக்கு, ஹிட்லர் கொடியவர் என்றே தெரியவில்லை.

ஆக, நமோ நரேந்திர மோடி, வெறுமனே மக்களவை உறுப்பினராகி, எதிர்கட்சி தலைவர் என்று சொல்லிக் கொண்டு, ஐந்தாண்டுகள், மக்களவையில் உட்கார்ந்து இருக்கப் போவதில்லை.

நமோ நரேந்திர மோடி, எவ்விதத்திலாவது, பிரதம மந்திரியாக வேண்டிய கட்டாயம்.

பிரதம மந்திரியானால் மட்டும் போதாது. அனைத்து மாநிலங்களிலும், நமோ ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும்.

நமோ நரேந்திர மோடி, மாநில முதல்வர்களை நியமனம் செய்வார்.

மாநிலங்கள் மட்டும் அல்ல; நகராட்சி; மாநகராட்சி என்று அனைத்திலும் நமோ ஆட்சி நிலை நடந்தால்தான், நமோ நரேந்திர மோடியின் திட்டங்கள் செயல்படும்.

சும்மா, மக்களவையிலும்; சட்டசபையிலும் பேசிக்கிட்டு இருப்பது, நமோ நரேந்திர மோடிக்கு பிடிக்காதது.

ஆக, தமிழகத்திலும் நமோ ஆட்சி தான்.

திமுகாவும் காங்கிரஸும் கூட்டாக இருந்தப்பவே, காங்கிரஸ்காரங்க காமராஜர் ஆட்சி என்று சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆனா, அவுங்களுக்கு, காமராஜர் ஆட்சி எப்படி அமைக்கிறது என்று தெரியலை. சோனியா அம்மையாருக்கும், வழிமுறைகள் தெரியலை.

நமோ நரேந்திர மோடி, சகலமும் அறிந்தவர்.

அவருக்கு, தமிழகத்தில், நமோ ஆட்சி எப்படி அமைப்பது என்று நன்கு தெரியும்.

இப்ப ஒப்பந்தத்திலே, டில்லிக்கு நீங்க; தமிழகத்துக்கு நாங்க என்று தெளிவாக எழுதி வாங்கி இருக்கீங்களா.

இப்பவே, மதுரையிலே, டீக்கடை முன்னாடி, திறந்த வாயை மூடாமல், டெலிவிஷனில், மோடி வித்தையைக் கண்டு, மக்கள் சொக்கிப் போய் கிடக்காங்க.

இராதா கிருஷ்ணன்களுக்கு, எம்பியாகனும்; மத்திய மந்திரி ஆகணும்; என்று ஆசை இருக்கும்போது, தமிழக முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருக்காதா.

நமோ நரேந்திர மோடி நிறைவேற்றி வைக்க மாட்டாரா; அவரால் முடியாதது என்று உண்டா.

இரண்டு பூணைகள் அப்பத்துக்கு சண்டை போட்டுக்கிடுமாம். அப்ப குரங்கு ஒன்று, அப்பத்தை பகிர்ந்து கொடுக்கிறேன் என்று சொல்லி, முழு அப்பத்தையும் விழுங்கிடும்.

ஆக, நமோ நரேந்திர மோடிக்கு, உங்களிடம் இருந்து உங்களது பலத்தினை, தன்வசப்படுத்திக் கொள்ள முடியும்.

அதேபோல், நமோ நரேந்திர மோடிக்கு, உங்களை பலவீனம் ஆக்கவும் முடியும்.

உங்களுக்கு வேறு வழியே இல்லை. நீங்களும், ஒரு நமோவின் முகமூடியை வாங்கி மாட்டிக் கொள்ளுங்க.

நமோ வைக்கும் ஆப்பு, இங்கிருக்கும் மூவருக்கும் மட்டும் அல்ல.

இங்கில்லாதவர்களுக்கும் சேர்த்தே, நமோ ஆப்பு வைக்கிறார்.

ஆக, அபி போலோ; நமோ. நமோ.

Hail NaMo.

No comments:

Post a Comment